தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் 6 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 2 லட்சத்து 6 ஆயிரத்து 737ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 61 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்டறியப்பட்ட 6 ஆயிரத்து 988 பேரில், 4 ஆயிரத்து 164 பேர் ஆண்கள் என்றும், 2 ஆயிரத்து 824 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னையை பொறுத்த வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 537ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, ஒரே நாளில் 7 ஆயிரத்து 758 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 55ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 73ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டுவில் 449 பேரும், காஞ்சிபுரத்தில் 442 பேரும், திருவள்ளூரில் 385 பேரும், விருதுநகரில் 376 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக மேலும், 89 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post