சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியினை உறுதி செய்திடவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மீன் விற்பனை செய்யவேண்டுமெனவும், எக்காரணத்தை கொண்டும் பொதுமக்கள் மீன் வாங்க துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மீன் கொள்முதல் செய்ய மொத்த வியாபாரிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுமெனவும், அடையாள அட்டை வழங்கப்பட்ட படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு மட்டுமே துறைமுகத்திற்குள் அனுமதி வழங்கப்படுமெனவும் கூறியுள்ளார். விசைப்படகுகள் எக்காரணம் கொண்டும் நாட்டுப்படகுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் மீன் விற்பனை செய்யக்கூடாது என்றும், இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் மீனவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமெனவும் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post