நைஜீரியாவில் அமைந்துள்ள மிதக்கும் சேரி என அழைக்கப்படும் மாகோகோ குறித்து இன்றைய உல்லாச உலகம் தொகுப்பில் காணலாம்…
நைஜீரியாவின் பழைய தலைநகரும், ஆப்பிரிக்க கண்டத்தின் பொருளாதார மையங்களில் ஒன்றாக திகழும் நகரம் லாகோஸ். ஏராளமான இயற்கை வளங்களை கொண்ட நைஜீரியாவின், பொருளாதார வளர்ச்சியில் லாகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. கடல்நீரால் சூழப்பட்டு தீவு போல காட்சியளிக்கும் லாகோசின் கரையில் அமைந்துள்ளது Floating slum என அழைக்கப்படும் மாகோகோ. கடல்மட்டத்தை விட தாழ்வாக அமைந்துள்ள நிலப்பரப்பில் கடல்நீர் ஊடுருவியுள்ளதால், ஏரி போன்று மாகோகோ காட்சியளிக்கிறது.
2 முதல் 3 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரியில், மரப்பலகைகளில் வீடுகள் கட்டி, மக்கள் வசித்து வருகின்றனர். நெருக்கமான வீடுகள், அதிக மக்கள் தொகை, அடிப்படை வசதிகள் குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளை மாகோகோ மக்கள் எதிர்கொண்டுள்ளனர். 2 லட்சம் பேர் முதல் 3 லட்சம் பேர் வரை மாகோகோவில் வசிப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை யாரும் துல்லியமாக கணக்கிடவில்லை. மீன்பிடித்தலை பிராதன தொழிலாக கொண்டுள்ள மாகோகோ மக்கள், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு படகுகளில் பயணிக்கின்றனர். நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீரால் ஏரி நீர் மாசடைந்து வருவதால் இம்மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐநாவின் முயற்சியால் இப்பகுதியில் பள்ளி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் பிளாஸ்டிக் டிரம்கள் மற்றும் மரங்களைக் கொண்டு பள்ளி கட்டப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 1000 மாணவர்கள் வரை படித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
லாகோஸ் நகரமும், மாகோகோ சேரியும் சுற்றுலாப் பயணிகளால் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்க்கப்படுகிறது. லாகோஸ் நகரை நைஜீரியாவின் மற்றப் பகுதிகளுடன் இணைக்கும் நீண்ட பாலத்தில் பயணிப்பவர்களுக்கு, மகோகோவின் முழு அழகையும் கண்டுரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது
19ம் நூற்றாண்டிலிருந்து மகோகோவில் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்து வருகிறது. வளர்ச்சியை காரணம் காட்டி, மாகோகோவிலிருந்து, பூர்வ குடிமக்களை வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை நைஜீரிய அரசு மேற்கொண்டது. எனினும் பலதலைமுறைகளாக வசித்து வரும் அம்மக்கள், மகோகோவை விட்டு வெளியேறுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.
Discussion about this post