கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓசூரில் 20 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவாறு காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில், கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, விவசாயிகள், சிறு-குறு தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை என்றும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதற்கு இடையூறு இல்லாத வகையில் கடன் வழங்கப்படுவதாகவும் விளக்கமளித்தார்.
கொரோனா பாதித்துள்ள இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் கடைபிடித்து வருவதாகவும், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
நோய்த்தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என முதலமைச்சர் குற்றம்சாட்டினார். நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், அரசின் சிறப்பான நடவடிக்கையால், படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருவதாகவும் கூறினார்.
கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி மாவட்ட எல்லையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி வழியாக சேலம் புறப்பட்ட தமிழக முதல்வருக்கு தருமபுரி மாவட்ட எல்லையில் காரிமங்கலம் சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் மற்றும் அதிகாரிகள் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post