10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க வசிதியாக, விலையில்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பாடப்புத்தகம் வாங்க வரும் மாணவர்கள், பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும் எனவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னர் வந்து பாடப்புத்தகங்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவிலகலை கடைபிக்கும் வகையில், நிற்பதற்கான வட்டங்கள் வரையப்படவேண்டும், மாணவர்கள் அல்லது பெற்றோர்கள், கல்வி உபகரணங்களை வாங்க வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும் எனவும், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும் எனவும், பள்ளி வளாகத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post