கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, இங்கிலாந்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை, ”இந்தியா குளோபல் வீக் 2020” மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய மறுமலர்ச்சியுடன் இந்தியாவை இணைப்பது இயற்கையானது என்றும், உலகளவிலான மறுமலர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறினார். இந்தியாவின் மருந்தியல் துறை சொந்த நாட்டுக்கு மட்டுமில்லாமல், முழு உலகிற்கும் சொத்து எனவும் தெரிவித்தார். உலகில் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளில் மூன்றில் இரண்டு பங்கு ஊசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும், கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பூசி தயாரிப்பு பணியில் இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post