இருகைகளும் இல்லை என்றாலும், தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைத்து தன் 4 பிள்ளைகள் மற்றும் மனைவியை காப்பாற்றி வந்த விவசாய கூலித்தொழிலாளியின் மன உறுதியை குலைத்திருக்கிறது கொரோனா…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட திம்மச்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருக்கு பிறவி முதலே இரண்டு கைகளும் கிடையாது..
கைகள் இல்லாவிட்டாலும் ஒருபோதும் மற்றவர்களை விட சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிப்பவர்.. விவசாய கூலி வேலைக்கு சென்று, கால்களாலேயே நீர் பாய்ச்சுவது, தேங்காய் உரிப்பது, விறகு வெட்டுவது உள்ளிட்டவற்றை திறமையாக செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.. கைகள் உள்ளவர்களால் செய்யமுடியாத கடினமான பணிகளையும் அசராமல் கால்களால் செய்து சாதித்து வருபவர் திம்மராயப்பா.
திம்மராயப்பாவிற்கு திருமணமாகி 4 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கைகள் இல்லாவிட்டாலும் கால்களால் மட்டுமே வாழ முடியும் என பலருக்கும் தன்னம்பிக்கையாக விளங்கி வரும் இவர் தனது 4 ஆண் பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார்…
இப்படி முன்னுதாரணமாக திகழ்ந்து வந்த திம்மராயப்பாவின் வாழ்க்கையிலும் கொரோனா விளையாடிவிட்டது.. கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள்முதல் கூலி வேலைகள் இல்லாமல் உணவிற்கே சிரமப்பட்டு வருகிறார்.. தனக்குமாற்றுத்திறனாளிகளுக்கான உதவிதொகை கிடைத்துவந்தாலும் அது போதவில்லை என்கிறார்.. கொரோனா ஊரடங்கை சமாளித்து தனது குடும்பத்தை நடத்த அரசு மற்றும் தனியார் தன்னார்வ அமைப்புகள் உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post