இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில், London School of Hygiene and Tropical Medicine என்ற அமைப்பு, உலக மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர், அதாவது 170 கோடி பேர், கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்திருந்தது. இதேபோன்ற ஆய்வை தற்போது, அமெரிக்காவை சேர்ந்த மாசெசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியும்(Massachusetts) நடத்தியுள்ளது. உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்தை உள்ளடக்கிய 84 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்தாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை உலகம் முழுவதும் 20 கோடி முதல் 60 கோடி பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாதான் அதிக பாதிப்புகளை சந்திக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், அடுத்தாண்டு பிப்ரவரியில் தினந்தோறும் 2 லட்சத்து 87 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு நடத்தப்பட்ட 84 நாடுகளிலும் அடுத்தாண்டு கொரோனா பாதிப்பு 155 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தாண்டு ஜூன் 18ஆம் தேதி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 கோடியே 85 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 6 லட்சமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஆய்வு முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க அனைத்து நாடுகளும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், நோய் பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிய வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
Discussion about this post