சென்னை வடபழனியில் செயல்பட்டு வரும் விஜயா மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தற்காலிகமாக மருத்துவமனை மூடப்பட்டது.
வடபழனி என்எஸ்கே சாலையில் செயல்பட்டு வரும் விஜயா மருத்துவமனை மற்றும் விஜயா ஹெல்த் கேர் சென்டர் ஆகியவற்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மருத்துவமனையின் செவிலியர் விடுதியில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனையடுத்து, நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விஜயா மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து, விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் உட்பட மற்ற நோயாளிகளும் விஜயா ஹெல்த் கேர் சென்டருக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post