கூலிப்படையை ஏவி காதல் கணவரைக் கொலை செய்த மனைவி உள்பட 4 பேர், தஞ்சை மாவட்டக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரின் கொலையில் குற்றவாளி கிடைக்கவில்லை என்றால், என்னைக் கைது செய்து கொள்ளுங்கள் எனத் தெனாவெட்டாகச் சொன்ன மனைவி… கொலை செய்ததற்கான காரணத்தை கூலாக ஒத்துக் கொண்ட அதிர்ச்சிச் சம்பவம். கூலிப்படையை ஏவி கணவரைப் பட்டப்பகலில் கொலை செய்த மனைவி… குற்றவாளியாக தம்மை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று சொன்ன தெனாவெட்டு… என ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டக் காவல்துறையையும் மிரள வைத்துள்ளார் இலங்கைப் பெண் ஒருவர். தஞ்சை காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர் 48 வயதான யூசுப். இவர் கடந்த 25-ஆம் தேதி, பிற்பகல் 1.30 மணியளவில், தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தமது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது யூசுப்பின் காரை, வல்லம் மேம்பாலத்தில் வைத்து, திடீரென சில மர்ம நபர்கள் வழிமறித்தனர். அவர்கள் யூசுப்பை காரை விட்டு இறங்கச் சொல்லி மிரட்டியதையடுத்து, செய்வதறியாது காரை விட்டு இறங்கிய யூசுப்பை, அந்த மர்மக் கும்பல், பட்டப்பகலில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்தது.
இந்தச் சம்பவம் பற்றித் தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அதில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரான யூசுப், குவைத் நாட்டில் பணிபுரிந்ததும், அங்கு அவருக்கும் இலங்கையைச் சேர்ந்த அசீலா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும், திருமணம் முடிந்த நிலையில், குவைத்தில் இருந்து திரும்பிய யூசுப்-அசீலா தம்பதியினர் தஞ்சாவூரில் வசித்து வந்ததும், அப்போது அவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு, அது காவல் நிலையத்தில் வழக்காகப் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. மேலும், கணவன்-மனைவிக்கிடையில் சொத்துப் பிரச்சினை இருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், வல்லம் காவல்துறையினர், யூசுப் படுகொலையானது பற்றி திருச்சியில் தனியாக வசித்து வந்த அசீலாவுக்கு தகவல் கொடுத்தனர்.
அதற்கு எந்தவித அதிர்ச்சியும் காட்டாத அசீலா, சுமார் 4 மணி நேரம் கழித்து, வழக்கறிஞர் ஒருவருடன் மிக அலட்சியமாக காவல்நிலையம் வந்தார். கணவர் எப்படி இருக்கிறார் என்பது பற்றி எந்தத் தகவலையும் கேட்காத அசீலா, தமக்கும் இக்கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என காவல்துறையினர் எந்தக் கேள்வியும் கேட்காமலே தெரிவித்தார். அசீலாவின் அலட்சியமான பதட்டமில்லாத நடவடிக்கைகளை வைத்து, கொலைக்கும் அவருக்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு என்பதை யூகித்துவிட்ட காவல்துறையினர், அசீலாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் இறுக்கமான விசாரணையை ‘கூலா’கவே எதிர்கொண்ட அசீலா, ‘உண்மை குற்றவாளியைக் உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், என்னை வேண்டுமானால் குற்றவாளியாக்கி வழக்குப் போட்டுக் கொள்ளுங்கள்’ என மிகவும் தெனாவெட்டாகப் பதில் அளித்துள்ளார். அதையடுத்து அசீலாவை விட்டுப் பிடிக்க முடிவு செய்த காவல்துறையினர், வல்லம் மேம்பாலத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து அவற்றை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில்,
‘மாஸ்க்’ அணிந்த 3 நபர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் கொலை நடந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்களில் இருவரின் கைகளில் இரத்தக் கறை இருப்பதும் தெளிவாகத் தெரிந்தது. அதையடுத்து, அந்த நபர்கள் யார் என்பது குறித்து, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் விசாரித்ததில், அவர்களின் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் திருச்சியைச் சேர்ந்த சகாயம் என்கிற சகாதேவன் என்பது தெரியவந்தது. அதே போல், மோட்டார் சைக்கிளில் நடுவில் அமர்ந்திருந்தவர் பிரகாஷ் என்பதும், பின்னால் அமர்ந்திருந்தவர் பார்த்திபன் என்பதையும் உறுதி செய்த காவல்துறையினர், அவர்கள் மூன்று பேரையும் பிடித்து வந்து விசாரணையைத் தொடங்கினர். அதில், அந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் மொத்தம் 6 பேர் என்பதும், அவர்களைக் கொலைக்கு ஏவியது அசீலா என்பதும் ஊர்ஜிதமானது.
அதையடுத்து அசீலாவிடம் காவல்துறையினர், அவர்கள் பாணியில் தனி விசாரணை மேற்கொண்டனர். அப்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அசீலா, அவரது கணவர் யூசுப்புக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் அவர்களிருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அதையடுத்து அவரைப் பிரிந்து திருச்சியில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அப்போது கணவன்-மனைவிக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், யூசுப், அசீலாவுக்கு கொடுப்பதாக ஒப்புக் கொண்ட சொத்துக்களையும் கொடுக்காமல் காலதாமதம் செய்ததால், ஆத்திரமடைந்து அவரைக் கூலிப்படையை ஏவிக் கொலை செய்ததாக தெரிவித்தார். இக்கொலையில் கைதானவர்கள் தவிர்த்து, தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கூலிப்படையை ஏவி கணவரைக் கொலை செய்த மனைவி, எந்தப் பதட்டமும் இல்லாமல் அலட்சியமாக காவல்துறையை எதிர் கொண்ட சம்பவம், காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post