டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் தூதுவராக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச திரைப்படக் கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஆண்டுதோறும் நடக்கும் கொண்டாட்டமான விழாதான் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா. இந்த ஆண்டு நடைபெற உள்ள இந்த விழாவின் தூதராக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஆஸ்கர் வென்ற மார்ட்டின் சார்கோசி, அல்ஃபன்ஸோ குரான், தைக்கா வைத்தித்தி, ரியான் ஜான்சன், நிக்கோல் கிட்மேன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் டொரோன்டோ திரைப்பட விழாவின் தூதுவர்கள் பட்டியலில் உள்ளனர். அதில் இந்தியாவிலிருந்து பிரியங்கா சோப்ராவும் அனுராக் கஷ்யப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்கும் இந்த திரைப்பட விழா, 19 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் இருக்கும் காரணத்தினால் சிறந்த திரைப்படங்களை அறிவித்தல் உள்ளிட்ட விழாவின் பல முக்கிய நிகழ்வுகளை டிஜிட்டல் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முதல் 5 நாட்களில் 50 சர்வதேசத் திரைப்படங்களை சமூக இடைவெளியைக் கடைபிடித்து திரையரங்குகளில் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவின் வரலாற்றில் டிஜிட்டலில் லாஞ்ச் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். கேன்ஸ் திரைப்பட விழா, ட்ரிபெக்கா திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் டொரோன்டோ திரைப்பட விழா தீவிர கட்டுப்பாடுகளுடன் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post