மகாராஷ்டிராவில் கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட தாராவியில், வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளுக்கும் முன்மாதிரியாக அங்கு வசிக்கும் தமிழர்கள் திகழ்கின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
மும்பையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி தாராவி. ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாகவும் இது விளங்குகிறது. 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தாராவியில், சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மிகச் சிறிய அளவிலான வீடுகளில் மிகவும் நெருக்கமாக அவர்கள் அனைவரும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், அடுத்தடுத்து பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இத்தனை லட்சம் மக்களும் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தி வந்ததால், அதன் மூலம் நோய் பரவல் அதிகரித்ததாக கூறப்பட்டது. அத்துடன், கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாகவும் தாராவி உருவெடுத்தது.
எனவே, நோய் மேற்கொண்டு பரவுவதை கட்டுப்படுத்த, மும்பை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். பல பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், பரிசோதனை எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. ((தாராவியில் இதுவரை சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.))
பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்டவை முகாம்களாக மாற்றப்பட்டு, கொரோனா அறிகுறியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இத்தகைய காரணங்களால், ஹாட்ஸ்பாட்டாக விளங்கிய தாராவியில் தற்போது கொரோனா பாதிப்பு பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடந்த மாதம் 4.3 சதவீதமாக இருந்த நோய் பரவல் விகிதம், தற்போது 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல, ஏப்ரல் மாதம் 5 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், தற்போது 3.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தினமும் இரட்டை இலக்கத்தில் பதிவாகி வந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை, தற்போது ஒற்றை இலக்கமாக மாறியுள்ளது.
தாராவியில் இதுவரை சுமார் 2,200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 1,100 பேர் குணமடைந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றிய தாராவி மக்களுக்கு நன்றி எனவும், தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் பாராட்டுக்கு உரியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது கொண்டாட்டத்திற்கான அழைப்பு என குறிப்பிட்டுள்ள சாம்னா, கொரோனா நடவடிக்கையில் அரசை விமர்சிப்பவர்கள் இந்த கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதேபோல, பல்வேறு தரப்பினரும் தாராவி மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆசியாவிலேயே அதிக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி என்பதால், கொரோனா தொற்றால் தாராவி அதிகம் பாதிக்கப்படும் என தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால், அந்த கூற்றை பொய்யாக்கி, தாராவியில் வாழும் தமிழ் மக்கள் தற்போது கொரோனாவை பெருமளவில் வென்றுள்ளனர். அத்துடன், பிற பகுதிகளுக்கும் அவர்கள் முன்மாதிரியாக திகழ்கின்றனர்.
Discussion about this post