உலகையே அச்சுறுத்தும் கொள்ளைநோய் கொரோனா பரவும் காலத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்வதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார வெறி பிடித்து அலையும் சதிகார திமுகவின் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்ள ஆள் வைத்து நாளொன்றுக்கு ஒரு அறிக்கை வெளியிடுவதாக சாடியுள்ளார்.
WHO மற்றும் ICMR பாராட்டும் வகையில் கொரோனாவில் இருந்து தமிழக மக்களை காக்க, தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் அறிக்கையில் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.இரவு பகல் பாராமல் உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்ட மனம் இல்லாமல், விடியா மூஞ்சித்தனமாக ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.கட்சியில் உள்ள தலைசிறந்த ஊழல் பெருச்சாளிகளை தேர்ந்தெடுத்து, அவர்களின் பெயரிலேயே கற்பனையான குற்றச்சாட்டுகளை கடை சரக்காக்கி விற்பனை நடத்த ஸ்டாலின் பெரும்பாடு படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திரம் திட்டம் துவங்கி ஏராளமான திட்டங்களில் ஊழல் செய்த டி.ஆர் பாலுவை வைத்து அரசுக்கு எதிராக அறிக்கை விடுவதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாக அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எந்த ஆலோசனையும் வழங்காமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அரசை குறை கூறி அறிக்கை வெளியிடுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடியுள்ளார்.பிறப்பு சான்றிதழை மட்டுமே தகுதியாக வைத்துக் கொண்டு, பின்வழியில் தலைமைக்கு வந்தவர்களிடம் இதை தான் எதிர்பார்க்க முடியும் என்று பொதுமக்கள் வருந்துவதாகவும், இரவு பகல் பாராமால் உழைக்கும் தமிழக அரசு மீது பழி போட்டு வந்தால் கொரோனா ஒழிவதற்கு முன்பே தமிழக அரசியலில் இருந்து திமுக ஒழிந்துபோகும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக விமர்சித்துள்ளார்.
Discussion about this post