அரிய வானியல் நிகழ்வான, கங்கண சூரிய கிரகணத்தின்போது வளையம் போல் காட்சியளித்த சூரியனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. ஹரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 90 சதவீதமும் தமிழகத்தில் 30 சதவீத அளவுக்கும் கங்கண சூரிய கிரகணம் தென்பட்டது. தமிழகத்தில் காலை 10.15 மணிக்கு தொடங்கிய கங்கண சூரிய கிரகணம், 12 மணிக்கு உச்சமடைந்தது. வடமாநிலங்களில் சூரியன் வளையம் போன்று காட்சியளித்தது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்தனர். தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. பொதுமக்கள் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்த்தனர். இந்தியா மட்டுமின்றி, மத்திய ஆப்ரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கங்கண சூரிய கிரகணத்தை காண முடிந்தது. சூரிய கிரகணத்தையொட்டி, கோயில்களில் நடை சாத்தப்பட்டிருந்தன.
Discussion about this post