ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பை முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 முதல் மே 17ம் தேதி வரை பணிக்கு வராத அரசு ஊழியர்கள், பணிக்கு வந்ததாக கருதப்படுவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 18ம் தேதிக்குப் பின் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் செயல்பட்ட போது, குறைந்த பட்ச போக்குவரத்து வசதி செய்யப்பட்டும், பணிக்கு வரவில்லை யென்றால் அது விடுப்பாகவே கருதப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மே 18ம் தேதிக்குப் பின் விடுப்பில் இருந்த ஊழியர்கள் அதற்கான விடுமுறை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்றும் கொரோனா அல்லாத வேறு வகையான மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தால் அதற்கான மருத்துவச் சான்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா அறிகுறி இருந்து விடுப்பில் இருந்தாலோ, அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தாலோ அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்பித்தால், அது ஊதியப் பிடித்தம் இல்லாத சிறப்பு விடுப்பாக கருதப்படும் என்றும் கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரவில்லையென்றாலும் அது பணிக்காலமாகவே கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அனைத்து வகை ஊழியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post