கொரோனாவால் ராஜஸ்தானில் யானை சவாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், யானைகளுக்கு போதிய உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
மொத்த நிலப்பரப்பில் 60 சதவீதத்திற்கும் மேல் பாலைவனமாக உள்ள மாநிலம் ராஜஸ்தான். அந்த மாநிலத்திற்கு விவசாயம் மற்றும் சுரங்கத்தொழிலுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத்துறை மூலமாகத்தான் அதிக வருவாய் கிடைக்கிறது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர்களில் மூன்றில் ஒரு நபர் ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளை ராஜஸ்தான் ஈர்த்து வருகிறது.
அதிக எண்ணிக்கையிலான கோட்டைகள், அரண்மனைகள், தார் பாலைவனம், உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தை, பிரம்மாவுக்கான தனிக்கோயில் உள்ளிட்டவை ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன. குறிப்பாக, ஒட்டக சவாரியும், யானை சவாரியும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் அம்மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் வருவாயும் பெருமளவில் குறைந்துள்ளது. இதனை சரிசெய்ய சுற்றுலாத்துறையில் பல்வேறு தளர்வுகளை ராஜஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது. சுற்றுலாத்தலங்களுக்கு வழக்கம்போல பொதுமக்கள் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும், கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலாத்தலங்கள் பயணிகள் வருகை அதிகமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், சுற்றுலாத்துறையை நம்பியுள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, யானைப்பாகன்களின் நிலை மோசமாகியுள்ளது.
ஜெய்ப்பூரில் மட்டும் சுமார் 8,000 குடும்பங்கள் யானை சவாரி தொழிலை மட்டுமே நம்பியுள்ளன. தங்களின் உணவுக்கே வழியில்லாத சூழலில், நூற்றுக்கணக்கான யானைகளுக்கு எவ்வாறு தொடர்ந்து உணவளிப்பது என தெரியாமல் யானைப்பாகன்கள் தவித்து வருகின்றார்கள்.
ஒரு யானையை பராமரிக்க ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை செலவாகும் என யானைப்பாகன்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு யானைக்கு உணவளிக்க வெறும் 600 ரூபாயை மட்டுமே தங்களால் செலவழிக்க முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.
சுற்றுலாத்துறை இதேபோன்று முடங்கி இருந்தால், எதிர்வரும் நாட்களில் இந்த தொகையைக்கூட தங்களால் செலவழிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
2 மாதங்களுக்கு முன்பு வரை சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்ததாக கூறும் யானைபாகன்கள், அதனால் யானை சவாரி தொழில் நன்றாக நடைபெற்றதாக குறிப்பிடுகின்றனர். யானை சவாரி ஒன்றிற்கு 1,100 ரூபாய் கிடைக்கும் எனவும், ஒரு நாளைக்கு 5 முதல் 6 சவாரிகள் நடைபெறும் எனவும் அவர்கள் கூறுகின்றன.
ஆனால், தற்போது ஒரு ரூபாய் வருவாய் கூட இல்லாமல் தாங்கள் தவித்து வருவதாகவும், இதனால், யானைகளுக்கு உணவளிக்க தங்களிடம் போதிய பணம் இல்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஜெய்ப்பூரின் Hathi Gaon என்ற பகுதியில் மட்டும் 103 யானைகள் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே தங்கள் குடும்பங்களையும், யானைகளையும் பாதுகாக்க, மத்திய மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டுமென யானைப்பாகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால், நிலைமை மேலும் மோசமாக கூடுமென அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்த யானைகளும், யானைப்பாகன்களும் தற்போது இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது பலரையும் வருத்தமடைய செய்துள்ளது.
Discussion about this post