அமேசான் மழைக்காடு 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமாக அழிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம். உலகின் நுரையீரல் என புகழப்படுபவை அமேசான் மழைக்காடுகள். உலகம் முழுவதும் அதிகளவில் வெளியாகி வரும் கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்துவதில் இந்த காடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அத்துடன் உலகின் 20 சதவீத ஆக்ஸிஜன் தேவையையும் இந்த காடுகள் பூர்த்தி செய்கின்றன. அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ள இந்த காட்டில், 500 வகையான பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றனர்.
அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் சதுர கிலோ மீட்டர்களாகும். இது தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பை காட்டிலும் 40 மடங்கு அதிகம். தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா, பொலிவியா, ஈகுவேடார், பிரெஞ்ச் கயானா, பெரு, வெனிசூலா உள்ளிட்ட 9 நாடுகளில் இந்த காடு படர்ந்துள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்தாண்டு இந்த காட்டில் ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. திட்டமிட்டே இந்த காட்டுத் தீ உருவாக்கப்பட்டதாக அப்போது புகார் இருந்தது. அமேசான் காடுகளை பாதுகாக்க ஹாலிவுட் நடிகர் லியர்னாடோ டிகாப்ரியோ உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். பிரேசிலின் அதிபராக ஜெய்ர் பொல்சனாரோ பொறுப்பேற்றதற்கு பின்னர்தான் காடுகள் அழிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமேசான் காடுகளில் 10,000 சதுர கிலோமீட்டர்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஐ.என்.பி.இ என்ற பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2019ஆம் ஆண்டு ஜூலை வரை 10,129 சதுர கி.மீ அளவிற்கு அமேசான் காடு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னையின் மொத்த நிலப்பரப்பை விட, 23 மடங்கு அதிக நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. அதேபோல முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 34.4% காடு அழிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்தாண்டு காடுகள் அழிப்பு மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில் வன அழிப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பிரேசில் அதிபர் செயல்படுவதாகவும், அதன் காரணமாக அமேசான் காடு அழிப்பிற்கு அவர் துணை போவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அமேசான் மழைக்காடுகள் இருப்பதால்தான், புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு உள்ளிட்டவை ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது அந்த காடும் அழிக்கப்பட்டு வருவதற்கு, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலகின் நுரையீரல் ஆபத்தின் விளிம்பில் உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post