சமூக வலைதளங்களில் திரைப்படங்களின் டீஸர், டிரைலர், மற்றும் படத்தின் காட்சிகள் வெளியிடுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. டிவி சேனல்களில் விளம்பரம் செய்வதை விட, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்கே படத் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.
அந்த அளவிற்கு சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திரைப்பட டீசர் மற்றும் டிரைலர்களில் ஆபாச வார்த்தைகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன.
இதனை பார்த்துவிட்டு தியேட்டருக்கு சென்றால், அந்த வார்த்தைகள் ஒன்று மியூட் செய்யப்பட்டிருக்கும். அல்லது நீக்கப்பட்டிருக்கும். நாச்சியார் படத்தில் இடம் பெற்ற ஒரு வார்த்தை அதிக அளவில் பேசப்பட்டு, அந்த படத்தின் மீதான கவனத்தை ஈர்த்தது. இருட்டு அறையில் முரட்டுக் குத்து, துருவ நட்சத்திரம் போன்ற படங்களின் டீசரிலும் சில வசனங்கள் அவ்வாறு இடம்பெற்றன.
ஆனால் படத்தில் அந்த வசனங்கள் மியூட் செய்யப்பட்டன. நோட்டா திரைப்படத்தின் டீசரிலும் ஒரு வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லு படாம பாத்துகோ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.
இவ்வாறு படத்தின் தலைப்புகளும் இரட்டை அர்த்த வசனங்களோடு மாறத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து தணிக்கைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரு திரைப்படத்தை மட்டுமே தணிக்கை செய்ய மட்டுமே தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக கூறுகின்றனர்.
அது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் டீசர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு வீடியோ, இரட்டை அர்த்தத்தோடு இருந்தாலோ, ஆபாச வார்த்தைகள் இருந்தாலோ, அதுபற்றி யூ டியூப் இணைய தளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
சமூக வழிகாட்டுதல்கள் (community guidelines)என்ற பெயரில் யூ டியூப் இணையதளம் வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும், தணிக்கைத்துறையின் கீழ் இவை வராததால், இதனை பயன்படுத்தி ஆபாச வசனங்கள் கொண்ட டீசர்களை வெளியிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களை இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவதால், படத் தயாரிப்பு நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
Discussion about this post