விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த மல்லி காலனியை சேர்ந்த மாதவன் – பெத்தலின் தம்பதியின் மகள் யவனம். அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். யவனத்தை திருமணம் செய்து கொடுக்கும்படி, கோவையில் வசிக்கும் அவரது உறவினரான பவித்ரன் இரண்டு முறை பெண் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ஆசிரியை யவனத்தின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் பவித்ரன், அவரது சகோதரர் வெங்கடேசன் உட்பட 5 பேர் யவனத்தின் வீட்டுக்கு சென்று அவரை கடத்த முயற்சித்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் பெத்தலின், ஐந்து பேரையும் தடுத்து நிறுத்த முயன்ற போது அவரை கீழே தள்ளிவிட்டு, யவனத்தை பவித்ரனும், வெங்கடேசனும் வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்ற யவனத்துக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கார் மூலம் கடத்தி சென்றனர்.
மகள் கடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளின் உத்தரவின் பேரில், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, ராஜபாளையம் பகுதி காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். விசாரணையில் ராஜபாளையம் அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில், இளம்பெண்ணை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் கடத்தல்காரர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.
படுகாயம் அடைந்த பெண் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய சம்பவம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Discussion about this post