வரும் 10 நாட்களுக்குள் இரண்டாயிரத்து 600 ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக, ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ், நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளுக்கு இலவசமாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். ஐந்தாயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கும் தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு 80 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் இதில் 50 சதவீத பெட்டிகள் சிறப்பு ரயில்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தேவையெனில் மீண்டும் தனி வார்டுகளாக பயன்படுத்தப்படும் எனவும் வினோத் குமார் குறிப்பிட்டார். இன்னும் 10 நாட்களுக்குள் இரண்டாயிரத்து 600 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், ஏப்ரல் 1 முதல் மே 25ம் தேதி வரை, 9.7 மில்லியன் டன் உணவு தானியங்கள் சரக்கு ரயில்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வினோத் குமார் தெரிவித்தார்.
Discussion about this post