சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை மாநகராட்சி காவல் எல்லையை தவிர பிற பகுதிகளில் நாளை முதல் ஆட்டோ மற்றும் ரிக்சாக்களை இயக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டுமே ஆட்டோவில் பயணிக்க அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாம் என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் ஆட்டோ மற்றும் ரிக்சா ஓட்டுநர்கள், ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் பயன்படுத்தும் வகையில், ஓட்டுநர்கள் சானிட்டைசர்கள் வைத்திருக்க வேண்டும் எனவும், ஓட்டுநர்களும், பயணிகளும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்சாக்களை தினமும் கிருமி நாசினி மூலம் 3 முறை சுத்தப்படுத்த வேண்டும் எனவும், ஓட்டுநர்கள் அடிக்கடி கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post