வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு சலுகை போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார்.மும்பையில் உரையாற்றிய அவர், கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார். தொழில்துறை உற்பத்தி 17 சதவீதம் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார். ரெப்போ வட்டி விகிதம் 4 புள்ளி 4 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இதன்மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3 புள்ளி 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் அளிக்க வேண்டும் எனவும், தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தினார். அன்னிய செலவாணி கையிருப்பு 487 பில்லியன் டாலர் அளவிற்கு உள்ளதாகத் தெரிவித்தார். ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி உதவும் என்றும் கூறிய அவர், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். வங்கி கடன்களுக்கான EMI செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
Discussion about this post