10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. இது தொடர்பான அறிக்கையில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு தேர்வறைக்கு 10 பேர் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகளில் பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வர்கள் அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையங்கள் அமைத்து, தேர்வு எழுத ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படுவதால் மாணவர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படாது எனக் கூறப்பட்டுள்ளது. மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 தேர்வினை எழுத இயலாத 36 ஆயிரத்து 89 தேர்வர்களுக்கு மட்டும் ஜூன் 18 ஆம் தேதி அவர்கள் ஏற்கெனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு நாளான்று பயன்படுத்தும் வகையில், 46 லட்சத்து 37 ஆயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுமெனவும், பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பயணம் செய்து வரும் மாணவர்கள் வீட்டு தனிமைப்படுத்தப்படுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களை TNepass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள இடத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரும் மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக 5 தொடர்பு எண்கள் உதவி எண்களாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுமெனவும், தேர்வு நுழைவுச் சீட்டிலும் அச்சடித்து தரப்படுமெனவும், இந்த எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய ஹால் டிக்கெட்டுகள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுமெனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Discussion about this post