தொழில் நிறுவனங்கள் இன்று முதல் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை உறுதிபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை தினமும் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும், மணிக்கு ஒரு முறை கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியள்ளது. தொழில் வளாகத்திற்குள் தொழிலாளர்கள் உள்ளே செல்வதற்கு முன் அவர்களிடம் உடல் வெப்பத்தை அளவீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்றும் சோப்பு அல்லது சானிடைசர்கள் மூலம் தொழிலாளர்கள் தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. 55 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக தகுதி உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அழைக்க வேண்டும் என்றும், 200 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்கள், தேவை இருப்பின் மருத்துவரை அழைக்கும் போது வருமாறு ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 200 முதல் 1000 தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் இரு தினங்களுக்கு ஒரு முறை பகுதி நேர மருத்துவர் ஒருவர் தொழில் செய்யும் நிறுவனத்திற்கு வந்து பரிசோதனை நடத்த வேண்டும் என்றும்,1000 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி, ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் எனவும், இதர பகுதிகளில் கட்டுமான பணி நடைபெறும் இடங்களிலேயே தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் மாநகராட்சி ஆணையரின் ஆய்வுக்கு பின், 25 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் எனவும், நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களிலேயே பணியாளர்கள் வர வேண்டும் எனவும், மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடி திருத்தகம் மற்றும் அழகு நிலையங்களை தவிர அனைத்து தனிக்கடைகளும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிளம்பர், ஏசி மெக்கானிக், வீட்டுவேலை செய்வோர் போன்ற சுயதிறன் பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படவும், http://tnepass.tnega.org என்ற இணையத்தின் மூலம் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post