தமிழக அரசு வாங்கியுள்ள 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை திருப்பி அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் லாபம் அடையும் முயற்சியை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரேபிட் டெஸ்ட் கருவிகளை திருப்பி அனுப்புவதால் அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். இதுதவிர எஞ்சியுள்ள அனைத்து கொள்முதல் ஆணைகளையும் ரத்து செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்க ஆந்திர அரசு 730 ரூபாய்க்கும், கேரள அரசு 699 ரூபாய்க்கும் கொள்முதல் ஆணை அளித்த போதும், தமிழக அரசு 600 ரூபாய்க்கு மட்டுமே ஆணை வழங்கியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உண்மை இவ்வாறு இருக்க மக்களின் பொதுச்சொத்தான கருவூலத்தை கரையான் அரிக்கும் காரியும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது பொய் பிரச்சாரத்தின் வெளிப்பாடு என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் உயிர்காக்கும் அதிமுக அரசை 600 ரூபாய் கொடுத்தது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியது விந்தையாக உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசின் மீது, உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post