கொரோனா எதிரொலியால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே, கொரோனா பண்டிகை என்ற பெயரில், ஒரு கும்பல் கறி விருந்தை நடத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமே கொரோனா அச்சத்தால் உறைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தியாக சமுத்திரம் பகுதியில், கொரோனா பண்டிகை கொண்டாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த சிவகுரு என்ற இளைஞர் கொரோனா பண்டிகை என்ற பெயரில், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வயல்வெளியில் கூடிய அனைவருக்கும், சிவகுரு, கறி விருந்து வைத்துள்ளார். சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இந்த கறி விருந்து நிகழ்வை நேரலையும் செய்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், சிவகுருவை கைது செய்தனர். 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கொரோனா பிடியில் இருந்து மீளாத நிலையில், கொரோனா பண்டிகை என்ற பெயரில் கறி விருந்து நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post