கொரோனாவை கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறையை பின்பற்ற ICMRல் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சை முறை என்றால் என்ன? இதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா?
கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்பட்டு, இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ள மற்ற நோயாளிகளின் உடலில் செலுத்துவதன் மூலம் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து விரைவில் அவர்களை குணமடைய செய்யும் சிகிச்சை முறைதான் பிளாஸ்மா சிகிச்சை. நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும்
எதிரணுக்கள் குறிப்பிடத்தக்க அளவு உருவாகி இருக்கும் என்பது தான் இதன் அடிப்படை கோட்பாடு.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகு அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படுகிறது. பின்னர் நோயில் இருந்து மீண்டவர்கள் உடலில் எந்த அளவுக்கு எதிரணுக்கள் உள்ளன என்பதைத் தீர்மானிக்க எலிசா சோதனை நடத்தப்படுகிறது. எல்லா சோதனைகளும் முடிந்து, ஒரு குணமான கோவிட்-19 நோயாளி உடலில் இருந்து ரத்தம் எடுப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன், அஃபெரிசிஸ் (apheresis) என்ற முறைப்படி ரத்தம் எடுக்கப்படும். இந்த முறையில் ஒருவர் உடலில் இருந்து பெறப்படும் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு மீதமுள்ள ரத்தம் மீண்டும் அவரது உடலிலேயே செலுத்தப்பட்டு விடும். இப்படி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் உடலில் இருந்து 800 மில்லி பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது. ஒரு கோவிட்-19 நோயாளிக்கு இதில் 200 மி.லி. அளவு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே குணமடைந்த நோயாளி உடலில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்மாவை 4 நோயாளிகளுக்கு செலுத்த முடியும். குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த பிளாஸ்மா முறை பயன்படுத்தப்படுகிறது.
சீனா, அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரளாவில் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் உள்ளது. தற்போது தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள ICMR உடன் பேசி வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post