கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள 21 நாள் ஊரடங்கு, வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் முகக் கவசம் அணிந்திருந்தனர். முதலமைச்சர்களிடம் தனித்தனியாக கலந்துரையாடிய பிரதமர் மோடி மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலான முதலமைச்சர்கள் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தினர். ஊரடங்கு நீட்டிப்பு மாநில வாரியாக இல்லாமல் தேசிய அளவில் இருக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து எப்போதும் வேண்டுமானாலும் முதலமைச்சர்கள் தம்மிடம் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்றும், 24 மணி நேரமும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post