கொரோனா இருப்பவர்கள் தகவல் தெரிவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சிக்கென பிரத்யேக கொரோனா மொபைல் செயலியை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிமுகப்படுத்தினார். தனிமைபடுத்தப்பட்டோர், மற்றும் சிகிச்சைபெறுவோரை கண்காணிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் Greater Chennai Corporation என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இருப்பவர்கள் இந்த செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் செல்பி எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் அவர்களை கண்காணிக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த செயலியை, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை முழுவதும் 10 லட்சம் குடியிருப்புகள் கண்காணிக்கப்படவுள்ளதாகவும், இந்த பணியில், சுகாதரத்துறை செவிலியர்கள், ஆசிரியர்கள், சுய உதவிக்குழு மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட 15ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post