ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்ட நிலையில் இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறைத் தலைவர் திரிபாதி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரொனா பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கூட்டம் கூடுவதைத் தடுக்க மாலை 6 மணிக்கு மேல் தடையுத்தரவு முடியும் வரை அனைத்து தேனீர் கடைகளையும் மூட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற +2 பொதுத் தேர்வில் பங்கேற்காத சுமார் 34 ஆயிரம் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Discussion about this post