கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ராணுவம், பேரிடர் மீட்புத்துறை, அஞ்சல்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை தவிர, பிற அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட வேண்டும்.
மாநிலங்களில் காவல், மாவட்ட நிர்வாகம், மின்சாரம், குடிநீர் சேவை, தூய்மை பணிகள் உள்ளிட்ட துறைகளை தவிர, பிற அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதியில்லை.
மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஆய்வகங்கள் தொடர்ந்து செயல்படலாம்.
நியாய விலைக் கடைகள், மளிகை கடைகள், காய்கறி மற்றும் இறைச்சி கடைகள், பால் விற்பனை மையங்கள் செயல்பட அனுமதி.
வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் செயல்படலாம்.
பெட்ரோல் நிலையங்கள், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை தவிர, பிற தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தவிர, அனைத்து வகை போக்குவரத்துக்கும் தடை.
ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மூடப்பட வேண்டும், இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட வேண்டும், அனைத்து வகையான பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் வெளியே நடமாடினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பாளர்களை நியமித்து உறுதிப்படுத்துவது அவசியம்.
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் குற்றமாக கருதப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
Discussion about this post