கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை, வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்து பயணிகள் ரயில், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவைகள் வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயணத்தை தொடங்கிய ரயில்கள் நிறுத்தப்படாது என்றும், அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காக சரக்கு ரயில்கள் இயக்கப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதால் வரும் ஜூன் 21 ஆம் தேதி வரை முன்பதிவு கட்டணங்கள் திரும்ப வழங்கப்படுமென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post