கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16-ம் தேதி ஒட்டு மொத்த தேசமும் அந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் 6பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மிக கொடூரமான முறையில் நடந்த இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஒட்டு மொத்த தேசத்தின் பார்வையும் டெல்லியை நோக்கி திரும்பியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிரான குரல்கள் ஓங்க ஆரம்பித்தன. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கைவிடுத்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான, மருந்துவ மாணவியை சிங்கபூருக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளித்தும் பலனில்லாமல் அவர் இறந்துபோனார். 23 வயதேயான இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரத்தைக்கண்டு நாடே கொந்தளித்தது. `தைரியமான பெண்’ என்பதை குறிக்கும் வகையில் அந்த பெண்ணுக்கு `நிர்பயா’ என்று பெயர் சூட்டபட்டது. முகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அஜய்குமார், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், சிறுவன் ஒருவன் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், விசாரணை நடந்துக்கொண்டிருக்கும்போதே, ஓட்டுநர் ராம்சிங் என்பவர் சிறையிலே தற்கொலை செய்துகொண்டார். குற்றவாளியாக சேர்க்கப்பட்ட 16 வயது சிறுவனை 3 ஆண்டுகள் கூர்நோக்கு இல்லத்தில் தண்டனைக்குப்பிறகு நீதிமன்றம் விடுதலை செய்தது.
வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் 2013-ம் ஆண்டு செப்டம்மாதம டெல்லி கீழமை நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குற்றவாளிகள் 4பேரும் இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், அந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. தங்களுக்கு எதிரான தூக்குத்தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கூறி குடியரசுத்தலைவருக்கு குற்றவாளிகள் சார்பில் கருணை மனுக்கள் அனுப்பப்பட்டது.அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரித்தார். 3 முறை தூக்கிலிடப்படுவதற்கான தேதிகள் குறிபிடப்பட்டும், நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில், இறுதியில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மார்ச் 20-ம் தேதி தூக்கிலிட உத்தரவிட்டது. அதன்படி இன்றைய தினம் அதிகாலை 5:30 மணி அளவில் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து பேசிய நிர்பயாவின் தாயார், “‘நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது’ என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது” என்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.
Discussion about this post