துபாயிலிருந்து சென்னை வந்த 14 பேருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்கள் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 8.30 மணிக்கு, எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த 3 பெண்கள் உட்பட 14 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் விமான நிலைய மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். 14 பேருக்கும் காய்ச்சல், சளியின் தாக்கம் அதிகம் இருந்ததால், அவர்கள் அனைவருக்கும் பூந்தமல்லி சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 14 பேருக்கு பூந்தமல்லி சிறப்பு மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பூந்தமல்லி சிறப்பு மருத்துவ முகாமில் மட்டும் மொத்தம் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post