கருவுற்ற பெண்கள், குழந்தைகளுக்கு கொரோனா தொற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக உலக நாடுகளில் ஒரு தகவல் பரவி வந்தது. இதன் உண்மைத்தன்மை என்ன? என்பது குறித்து லண்டன் மகப்பேறியல் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா நோய் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சமீபத்தில் குழந்தை பெற்றபோது, அந்தக் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கருவில் உள்ள குழந்தைக்கு தாயிடம் இருந்து கொரோனா பரவுமா? கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதா? குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தாக்க கூடுதல் வாய்ப்பு உள்ளதா? கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்கலாமா? கூடாதா? – என்ற கேள்விகள் உலகெங்கும் எழுந்தன.
இந்நிலையில் இந்தக் கேள்விகளுக்கு லண்டன் ராயல் கல்லூரியின் மகப்பேறியல் துறைத் தலைவர் மருத்துவர் எட்வர்டு மோரிஸ் பதில்களை அளித்து உள்ளார். அவரது பதில்கள் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கு நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்து உள்ளன.
எட்வர்டு மோரிஸ் தனது பதிலில், கருவில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாயிடம் இருந்து பரவுவதாக இதுவரை எந்த மருத்துவ ஆய்விலும் தெரியவரவில்லை என்றும், கருவுற்ற பெண்கள் அல்லது குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொரோனாவுக்கு இலக்காவார்கள் – என்பதும் எந்த ஆய்விலும் உறுதி செய்யப்படாத தகவல் என்றும் கூறி உள்ளார்.
மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதால் கொரோனா பரவுவதாகக் கூட இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும், எனவே உடல்நலத்துடன் உள்ள குழந்தைகளை கொரோனா பாதிப்புள்ள தாயிடம் இருந்து பிரிக்கக் கூடாது என்றும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படாமல் போனால் அது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் இவர் கூறி உள்ளார்.
ஆனால் அதே சமயம், கொரோனா வைரஸ் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்பதால், அது குறித்த முழு விவரங்களும் வெளியாகாத நிலையில், அடுத்தடுத்து ஆய்வுகள் மூலம் தெரியவரும் உண்மைகளையும் வழிகாட்டுதல்களையும் மக்கள் தொடர்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எட்வர்டு மோரிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருவுற்ற பெண்கள் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி, குழந்தைகளை ஆரோக்கியமாகப் பெற்றெடுக்க வாய்ப்புள்ளதாகவே மருத்துவர்கள் கருதுகின்றனர். எனவே கர்ப்பிணிகள் மற்றும் இளம் தாய்மார்கள் தேவையற்ற அச்சங்களைத் தவிர்த்து, பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றலாம்.
Discussion about this post