ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த, நடிகர் விஜய் நடித்து அவரின் 64-வது படமாக வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மாஸ்டர் படம் தொடங்கியதிலிருந்தே, அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதற்கான காரணம் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஜய் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் மாஸ்டர், இதன் பட்ஜெட் 180 கோடி ரூபாய் ஆகும். மேலும், படத்தின் வசூல் 300 கோடி ரூபாயை தொடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால், படத்தின் வியாபரத்தை எதிர்நோக்கி விநியோகஸ்தர்களும், படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி ரசிகர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
மாஸ்டர் படத்தில் முதல்முறையாக நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க, கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும், அனிருத் இசையமைக்க விஜய் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, யுவன் ஷங்கர்ராஜா ‘அந்த கண்ண பாத்தாக்க’ என்ற பாடலை பாடியிருக்கிறார். அதேபோல், சந்தோஷ் நாராயணனும் ‘பொலக்கட்டும் பரபர’ என்ற பாடலை பாடியுள்ளார். அதேபோல், அனிருத் தன் பங்கிற்க்கு 3 பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படத்தில் அருண்ராஜா காமராஜா, விக்னேஷ் ஷிவன் மற்றும் விஷ்ணு ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர். படத்தின் இரு பாடல்கள் இணையத்தில் முன்பே வைரலாகியுள்ளது, அதனுடன் சேர்த்து மொத்தம் 12 பாடல்கள் படத்தில் உள்ளன.
மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு, விஜய் சேதுபதியோட பேச்சு. மனுஷன் ரொம்ப ஜாலியா பேசிகிட்டே போய்ட்டாரு, பேச ஆரம்பிச்ச அவரு விஜய வெக்கப்பட வைக்குற அளவுக்கு பேசிட்டாரு. ரசிகர்கள் இல்லாததை ரசிக்கும் படியா கலாய்ச்சுட்டாரு. “கொரோனா நோய்க்கு பயப்படாதிங்க, இந்த நிலையில நம்மல தொட்டு மருத்துவம் பாக்குற மருத்துவர்களுக்கு நன்றி”னு சொல்லிட்டாரு. சிரிக்க வச்சுட்டே நன்றி சொல்லிட்டு போய்ட்டாரு.
இசைவெளியீட்டுவிழா குறித்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. விஜயின் பேச்சு, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒன்றாகவே எப்போதும் அமையும். அந்த வகையில், இன்றும் அவரது பேச்சு அப்படிதான் இருந்தது.
பலத்த கரகோஷங்களுக்கு இடையே விழாவில் பேசத் தொடங்கிய விஜய், ‘‘நண்பர் அஜித் மாதிரி கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன்’’ என்று சொன்னவுடன் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய அவர், ‘‘வாழ்க்கை நதி மாதிரி, நம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க , கல்லு எறிவாங்க. ஆனா, நாம கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும்’’ என்று போறபோக்கில் ஒரு தத்துவத்தை சொன்னார். விஜய் சேதுபதி பெயரில் மட்டுமில்லை. அவருடைய மனதிலும் எனக்கு இடம் கொடுத்துருக்கார் என்று பேசினார்.
Discussion about this post