சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை, லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தையும் அதன் தாக்கம் விட்டு வைக்கவில்லை.
ஐநா தலைமையகத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான பெண் தூதர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். ஐநா தலைமையகத்தில் வைரஸ் தொற்று பாதிக்கும் முதல் நபர் இவராவார். இதைத்தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் 14 நாள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக, 50 பில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வரும் வாரங்களில் நாம் அனைவரும் மாற்றங்கள் மற்றும் தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும் எனவும், இந்த குறுகிய கால தியாகங்கள் நீண்ட கால ஆதாயத்தை தரும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஐநா ஊழியர்கள் தொலைபேசி மற்றும் இணையம் வழியே ஏப்ரல் 12 வரை பணி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பணியாளர்கள் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவில் கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்கதான் என்று சீன வெளியுறவுதுறை அதிகாரி குற்றம் சுமத்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Discussion about this post