தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு, அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் விஜய். அதேபோல், ரஜினிக்கு பிறகு “பாக்ஸ் ஆஃபிஸ் கிங்” என்று விநியோகஸ்தர்களால் சொல்லப்படும் ஒரு நபரும் விஜயே. ஆனால், தற்போது அதுவே அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களில், விஜயின் படம் வசூலித்தது எவ்வளவு என்பது தெளிவாக தெரியவில்லை. ஏனென்றால், வசூல் நிலவரம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் ஒரு கருத்தும், திரைப்பட விநியோகஸ்தர்களால் ஒரு கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய் நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான “பிகில்” திரைப்படம் 300 கோடி வசூலித்து சாதனை படைத்ததாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த வசூல் நிலவரம் குறித்து தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்த வருமான வரித்துறை, அதன் தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனத்திடம் விசாரணையை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை தங்கள் காரிலேயே விசாரணைக்கு அழைத்துச் சென்றனர், அதில் விஜயின் வருமானம் குறித்த ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர் நேரில் ஆஜராக கோரி வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக, விஜய் சார்பில் அவரது ஆடிட்டர் நேரில் ஆஜரானார். இது அப்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது மீண்டும் பனையூரில் உள்ள விஜய் வீட்டில், வருமான வரித்துறை சோதனை செய்வதாக தகவல்கள் வெளியானது.மேலும், ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த ஆய்வுக்குப் பின் பேசிய அதிகாரிகள்‘விஜய் முறையாக வருமானவரி செலுத்தியுள்ளார் எனவும், பிகில் படத்துக்கு அவர் 50 கோடி மற்றும் மாஸ்டர் படத்துக்கு 80 கோடி ரூபாய் அவர் ஊதியமாக பெற்றுள்ளார்’என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்து வரும் அவரது 64-வது திரைப்படமான “மாஸ்டர்” திரைப்படத்தின் பட்ஜெட் 180 கோடி எனவும், விஜயின் சம்பளமோ 80 கோடிகள் எனவும் சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவரது சம்பளம் 80 கோடி என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், நடிகர் விஜயின் 65- வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், விஜயின் சம்பளம் 100கோடி எனவும், முன்பணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு 50 கோடி வழங்கி உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரையில் நடிக்கும் நடிகர்கள் திரையில் மட்டும் நேர்மையாக இல்லாமல், நிஜவாழ்க்கையிலும் நேர்மையாக இருந்தால், அவரை முன்மாதிரியாக நினைக்கும் ரசிகர் கூட்டமும் தங்கள் வாழ்க்கையில் நேர்மையாக நடந்துகொள்ள முயற்சியாவது செய்வார்கள்.
Discussion about this post