துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு முடிவெடுத்தது. அதன்படி, படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்வேளையில், இயக்குநர் மிஷ்கினுக்கும், விஷாலுக்குமிடையே மோதல் வெடித்தது. படத்திலிருந்து திடீரென மிஷ்கின் விலகியதாக தகவல் வெளியானது. முழுமையான காரணம் தெரியாத நிலையில், அண்மையில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “கதை எழுத 35 லட்ச ரூபாய் செலவிட்டதுடன், படம் எடுக்க இதுவரை 13 கோடி ரூபாய் செலவழித்து விட்டு பாதியில் விலகிவிட்டார்” என மிஷ்கின் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு மிஸ்கின் மறுப்புத்தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஷ்கின், “என் மீதான குற்றச்சாட்டுகளை விஷால் நிரூபிக்கவேண்டும். நான் விஷாலை, கடந்த 3 வருடங்களாக தம்பியாக நினைத்து பழகிவந்தேன். ஆனால், இப்படி என்மீது பொய் புகாரை அடுக்குவார் என நினைத்துப்பார்க்கவில்லை” என்றார்.
மேலும், “என் தாயை அவதூறாக பேசிய விஷாலை நான் மன்னிக்கமாட்டேன். இதற்கு அவர் பதில்கூறியே ஆகவேண்டும். தயாரிப்பாளர் யாரும் என்னை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று சொல்ல விஷால் யார், தமிழகத்தை விஷாலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இந்த விவகாரத்தை இதோடு விடப்போவதில்லை.விஷால் இனி தூங்க மாட்டார்” என்று எச்சரித்தார். துப்பறிவாளன் 2 – படத்தை விஷாலே இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post