இந்தியர்களுக்கு பொதுவாகவே ஒரு பழக்கம் உண்டு. அண்ணா சாலையில் குழி விழுந்தால் கும்பலாக போய் அதை பார்ப்பது. சுனாமி வந்தால் கூட்டமாக பீச்சுக்குப் போவது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது பாலத்தின் மீது நின்று அதை பார்ப்பது என்று வீரதீர செயல்களை செய்யக்கூடாத இடத்தில், செய்யக்கூடாத நேரத்தில் செய்வதில் நம்மாட்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. இதே போன்று சமீபத்திய வரவான கொரோனாவையும் இதே போன்றே டீல் செய்கின்றனர் நம் மக்கள்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மரண பீதியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். முகமூடி, சானிடைசர் என்று கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர். கும்பலாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளதால் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்பிருப்பவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே வேலைகளை பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.
என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும், அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் மக்கள் மனதில் மரண பீதி இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியர்கள் கொரோனாவை வேறுவிதமாக டீல் செய்கின்றனர். இஞ்சி, பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டால் கொரோனா பரவாதாம் என்பதில் ஆரம்பித்தது, ரக ரகமாக இஷ்டத்திற்கு தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் செய்து வருகின்றனர். பூண்டை தண்ணீரில் வேக வைத்து அந்த தண்ணீரை குடித்துவிட்டு பூண்டையும் தின்று விட்டால் கொரோனா பரவாது என்று ஒரு பக்கமும், கோவில் தீபாராதனையை தொட்டு கும்பிட்டால் கைகளில் இருக்கும் வைரஸ் அழிந்துவிடும் என்று ஒருபக்கமும் வாட்சப்களில் பரப்பி வருகின்றனர். கூடவே, சர்வரோக நிவாரணி நில வேம்பு கஷாயம் வேறு.
இது மட்டுமல்லாமல், ஹோலி பண்டிகையின் போது கொரோனாசுராவை எரித்து கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடவேண்டும் என்று வடமாநிலங்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே மும்பையில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தின் போது “கோ கரோனா, கரோனா கோ” என்ற கோஷங்களை எழுப்பினர். அந்த வழிபாட்டு கூட்டத்தின் போது புத்தமத பிக்குகளும், சீனா தூதரக அதிகாரி டாங் கோகாய் ஆகியோர் உடனிருந்தனர்.
அதே போல தற்போது, “கொரோனாவே ஓடிப்போ” என்ற பாடலை பெண்கள் குழுவாக சேர்ந்து பாடி வழிபாடு நடத்தி வருகின்றனர். 4 நிமிடங்கள் ஓடும் அந்த பாடலை ஆயுஷி சவுராஷியா என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதோடு, 23000கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவே ஓடிபோயிருனு சொன்னா அது போய்விடுமா? கும்பலா ஒரு இடத்துல ஒன்னு சேராதீங்கனு சொன்னா கும்பலா சேர்ந்து கொரோனாவ ஓட சொல்றீங்களே இதெல்லாம் ஓவரா தெரியலயா என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
Discussion about this post