லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் மெக்ஸிகோவில் சராசரியாக 10 பெண்கள் வன்முறைகளில் கொல்லப்படுவதாக அங்கிருந்து வெளியாகும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால், மெக்ஸிகோ பெண்கள் கடும் விரக்தியில் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தின் போது மெக்ஸிகோ நாட்டின் தலைநகரான மெக்ஸிகோ சிட்டியில் பெண்கள் ஊர்வலம் ஒன்று திட்டமிடப்பட்டது. இதில் சுமார் 80 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் மெக்ஸிகோ சிட்டியை அதிர வைத்தனர்.
ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் திடீரென வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள்தான் கற்களை வீசியதாகவும், அவர்கள் தடிகளைக் கொண்டு அரசு அலுவலகங்களைத் தாக்கியதாகவும் மெக்ஸிகோ அரசு கூறுகின்றது. இந்த வன்முறையை அடக்குவதாகக் கூறி மெக்ஸிகோ சிட்டியின் காவல்துறை ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டு வீச்சிலும் ஈடுபட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.
ஏற்கனவே அரசு மீது அதிருப்தியில் இருந்த மெக்ஸிகோ பெண்கள், மகளிர் தினத்தில் காவல்துறை நடத்திய தாக்குதலால் இன்னும் அதிக அதிருப்திக்கு ஆளாகினர்.
இதனையடுத்து ‘நாங்கள் இல்லாத ஒரு நாள்’ என்ற பெயரில் நாடு தழுவிய பெண்களின் வேலை நிறுத்தத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். திங்களன்று நடந்த இந்த வேலை நிறுத்தத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் பள்ளிகளுக்குச் செல்லும் சிறுமிகள் வரை அனைவரும் பங்கேற்றதால் இந்த வேலை நிறுத்தம் உலக அளவில் கவனம் பெற்றது. 67% மெக்ஸிகோ பெண்கள் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கு போராட்டம் நீடிப்பதால் மெக்ஸிகோவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் முடங்கி உள்ளன.
மெக்ஸிகோ அரசு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படாவிட்டால், பெண்களின் இந்தப் போராட்டம் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post