ஆசிய ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் விகாஸ் க்ரிஷன் மற்றும் சிம்ரன்ஜித் கவுர் ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஆசிய ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி போட்டியில் ஆண்கள் 69 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் விகாஸ் க்ரிஷன் கஜகஸ்தானின் அப்லைகான் ஷுஸுபோவை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 3 க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற விகாஸ் இறுதி போட்டிக்கு முன்னேறினார். அதேபோல், அரையிறுதியின் மற்றொரு போட்டியில், பெண்களுக்கான 60 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் சிம்ரன் ஜித் கவுர் சீன தைபே வீராங்கனையான ஷி யூ வூவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிம்ரன் ஜித், 4 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பிரபல குத்துச் சண்டை வீராங்கனையும் 6 முறை உலக சாம்பியனுமான மேரி கோம் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சீன வீராங்கனையான சங் யுவானை எதிர்கொண்ட மேரி கோம், 1 க்கு 4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் ஆசிய ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் தனது பயணத்தை நிறைவு செய்தார். அதேபோல், ஆண்கள் பிரிவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமித் பாங்கல், சீனாவின் ஜியாங்குவானிடம் 2 க்கு 3 என்ற கணக்கில் தோல்வியுற்று வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினார். மேரி கோம், மற்றும் பாங்கல் ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Discussion about this post