“இனிய மாலை வணக்கம்” என்று தமிழில் பேசி அனைவரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆச்சரியப்படுத்தினார்.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. அதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் இணைந்து, காந்தி மண்டப வளாகத்தில் 2 மரக்கன்றுகளை நட்டனர். இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இனிய மாலை வணக்கம் என்று தனது பேச்சைத் தமிழில் தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்துக்கு அடிநாதம் இட்டவர் காந்தி என்று புகழாரம் சூட்டினார்.
அகமதாபாத்தில் முதன் முதலில் காந்திஜி சபர்மதி ஆசிரமம் தொடங்கியபோது, அதில் காந்தியுடன் இணைந்த 25 பேரில் 13 பேர் தமிழர்கள் என்றும், அதனால், தமிழகம் எப்போதும் காந்திக்கு நெருக்கமான மாநிலம் என்றும் நினைவு கூர்ந்தார். மேலும், காந்திஜி 1896 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட முறை, தமிழகத்துக்குச் சுற்று பயணம் செய்துள்ளதாகவும், அப்போது தமிழ் கற்றுக்கொள்ள விரும்பிய அவர், 10 க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், காந்தியின் கொள்கைகளை இளைய சமுதாயத்தினர் பின்பற்றி வாழ்வில் மேன்மை பெற வேண்டும் என்று தெரிவித்து, அனைவருக்கும் நன்றி என்று மீண்டும் ஒருமுறை தமிழில் பேசி அசத்தினார். குறிப்பாக அவர் பேசும்போது, இடையிடையே தமிழ் மொழி இனிமையான மொழி என்று தமிழில் கூறியதோடு, தன்னுடைய தாய் மொழி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழியைக் காட்டிலும் தமிழ்மொழி சிறந்த மொழி என்று கூறி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தைப் பார்த்து போது, விழா அரங்கமே கரகோஷங்களால் நிறைந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post