மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால், மூன்றாவது குழந்தைக்கு ஊதியத்துடன் பேறு கால விடுப்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் சிஐஎஸ்எப் படையில் அதிகாரியாக பணியாற்றிய ஆயிஷா பேகத்திற்கு, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு, ஊதியத்துடன் 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக கருவுற்ற அவர், ஊதியத்துடன் விடுப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இரண்டாவது பிரசவத்துக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு வழங்குமாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார். இதற்கு எதிராக மத்திய அரசும், மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குநரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய சிவில் சர்வீஸ் விதிகளை சுட்டிக்காட்டி, ஆயிஷா பேகத்திற்கு, மூன்றாவது குழந்தைக்கு பேறுகால சலுகைகள் கோர முடியாது எனக் கூறியதுடன், தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
அரிதான நேரங்களில் 2-வது பிரசவத்துக்கும் சலுகைகளுடன் பேறுகால விடுப்பு வழங்குவது தொடர்பான விதிகளை தளர்த்த, மத்திய அரசு தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post