தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலர் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தாமிரபரணி ஆற்றில் தொழிற்சாலைக் கழிவு நீர் கலப்பதால் ஆறு மாசடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீரை மறுசுழற்சி செய்யவும், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கைகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post