சென்னை மாதவரத்தில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில், கலால் வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன பொருட்கள், ஏ.சி. காப்பர் வயர் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சென்னை மாதாவரத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சேமித்து வைத்திருந்தனர். இந்த கிடங்கில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென தீப்பற்றியது. மளமளவென பரவிய தீயால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும் புகை சூழ்ந்தது. தீ பரவியதால் பாதுகாப்பு கருதி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தீ விபத்தின் போது, கிடங்கில் இருந்த ஏராளமான ரசாயன கேன்கள் வெடித்து சிதறின. கிடங்கின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 15 லாரிகள், சுமை தூக்கும் இயந்திரங்கள் தீக்கிரையாகின.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 500க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள், 19 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் பற்றிய தீயானது, இன்று காலை 10.30 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தற்போது, தீ விபத்தால் ஏற்பட்ட கழிவுப் பொருட்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்துக் காரணமாக, காற்றில் ஏற்பட்டுள்ள மாசுபாடு தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடாசலாபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுடன் வட்டாட்சியர் சரவணன் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த தீ விபத்தில்100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கக் கூடுமென தெரிகிறது.
Discussion about this post