இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகா-வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் கடந்த 19ம் தேதி நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரனுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், படப்பிடிப்பு தளத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள லைகா நிறுவனம், படப்பிடிப்பு தளத்தில் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் இயற்கையாக நடந்த சம்பவத்துக்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் தாங்கள் எந்த குறையும் வைக்கவில்லை எனவும் லைகா நிறுவனம் கமலுக்கு பதில் அளித்துள்ளது.
பின்பு, இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள கடிதத்தில், படப்பிடிப்பு தளத்தில் நேரிட்ட விபத்து அளித்த அதிர்ச்சியில் இருந்து தாம் இன்னும் மீளவில்லை என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தை ஜீரணிக்க முடியாமல் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மயிரிழையில் தாம் உயிர் பிழைத்த அந்த உணர்வை விட, அவர்கள் உயிரிழந்து விட்டார்களே என்ற வேதனை தம்மை வாட்டி வதைப்பதாக, கடிதத்தில் இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post