சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் நடந்த இந்த பொது கூட்டத்தில், கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமையை நினைவு கூர்ந்தனர். இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உணவுத்துறைக்கென 6 ஆயிரத்து 500 கோடியை ஒதுக்கீடு செய்து விலையில்லா அரிசி திட்டத்தை அதிமுக அரசு மீண்டும் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் காமராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு,திருவாரூர் அருகே மாவூரில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நிதிநிலை அறிக்கையில் உணவுத்துறைக்கு 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்,கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், அப்போது பேசிய அவர், 1998 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது தான் கோவையில் இஸ்லாமிய சகோதரர்கள் நடத்திவந்த ஜவுளிக்கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தான் இஸ்லாமிய சகோதரர்கள் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் சீர்காழியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று, பொதுமக்களுக்கு, மரக்கன்றுகளை வழங்கினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழக மக்களை குழப்பதிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அற்ப புத்தியோடு திமுக செயல்பட்டு வருவதாக சாடினார். முன்னதாக அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்த 20 குழந்தைகளுக்கு அமைச்சர் தங்க மோதிரங்களை அணிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். அதிமுக ஆட்சி நீடிக்குமா என்று தொடர்ந்து பேசி வந்த மு.க. ஸ்டாலின், களைத்து விட்டதாகவும், அதிமுகவுக்கு பயந்து, பிரசாந்த் கிஷோர் என்பவரிடம் திமுக தேர்தல் பணிகளை ஒப்படைத்துள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post