நந்திதா தாஸ் இயக்கத்தில், நவாஸுதின் சித்திக் நடிப்பில் வெளியாகி உள்ளது மண்டோ திரைப்படம். மண்டோ என்றால் யார்? ஏன் அவரைப்பற்றி திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற கேள்வியோடு இக்கட்டுரையை துவக்குவோம்.
சதத் ஹசன் மண்டோ. உருது இலக்கியத்தின் பிதாமகன் என்று உரக்கச் சொல்லலாம் மண்டோவை. சாதிய, மதவாத மனங்களை உலுக்கிய கலகக்காரன் சதத் ஹசன் மண்டோ. 1912-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா அருகே சம்ராலா என்ற கிராமத்தில் பிறந்தவர். விக்டர் ஹ்யூகோ, ஆஸ்கார் வைல்ட், ஆண்டன் செகாவ், கார்க்கி ஆகியோரின் படைப்புகளை மொழியாக்கம் செய்து அதன்வழியாக படைப்புலகிற்குள் நுழைந்தார். அவரது முதலாவது படைப்பு தமாஷா.ஜாலியான் வாலாபாஹ் படுகொலையை களமாக கொண்டு இந்த கதையை எழுதிய அவர், வாழ்நாள் முழுவதும் பிரிவினையின் கோரங்களை எழுத்தில் கொண்டு வந்தார்.
குறிப்பாக இந்திய பிரிவினையை மையமாக வைத்து அவர் எழுதிய சிறுகதையான “திற” காலங்கள் கடந்தும் அதிர்வலைகளை உண்டாக்கும் படைப்பு. அரசியல் கொந்தளிப்புகளின் சுழியில் சிக்கிக் கொள்ளும் சாமான்ய மனிதர்களின் குறிப்பாக பெண்களின் நிலை எல்லா காலகட்டத்திலும் ஒன்றுதான், அந்த உண்மையை முகத்தில் அறைந்து கூறுவதுதான் “திற”.
பிரிவினை தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியிருப்பார். “ஒரு லட்சம் இந்துக்களும், ஒரு லட்சம் முஸ்லீம்களும் இறந்து போனார்கள் என்று சொல்லாதீர்கள். இரண்டு லட்சம் மனிதர்கள் இறந்து போனார்கள் என்று சொல்லுங்கள். இரண்டு லட்சம் மனிதர்கள் மரணமடைந்தததில் துயரம் கொள்வதற்கு ஏதுமில்லை. உண்மையில் துயரம் கொள்ள வைப்பது எதுவென்றால் கொல்லப்பட்டவர்களும் கொலை செய்தவர்களும் ஒரே வகையைச் சார்ந்தவர்கள் என்பதுதான்”. சதத் ஹசன் மண்டோ யார் என்ற கேள்விக்கு இந்த வரிகளே பதிலாக அமையும்.
22 சிறுகதை தொகுப்புகள், ஒரு நாவல், 3 கட்டுரை தொகுப்புகள் மற்றும் அங்கிள் சாம்-க்கு மண்டோ கடிதங்கள் போன்றவை அவரது இலக்கிய பங்களிப்புகள் ஆகும். வாழும் காலம் வரை கலகக்காரனாக, குடிநோயாளியாக, தற்கொலைக்கு முயல்பவராக தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட மண்டோ, இன்று இலக்கிய வானின் துருவ நட்சத்திரமாக ஒளிர்கிறார். இந்த முரண்நகை தான் வாழ்வின் சிறப்புகளில் ஒன்று.
1955-ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் தமது 42-வது வயதில் இருத்தலின் துயரத்தில் இருந்து மரணம் எனும் விடுதலை நோக்கி புறப்பட்டார். இன்றைய காலகட்டத்தில் கலையின் நவீன வடிவங்களில் ஒன்றான திரைப்படத்தின் வாயிலாகவும் இளைய தலைமுறையுடன் உரையாடுகிறார் சதத் ஹசன் மண்டோ…
Discussion about this post