டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா-அமெரிக்கா இடையே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில் இரண்டு நாள் அரசு முறைப்பயணத்தை மேற்கொண்ட அதிபர் டிரம்ப் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.வர்த்தகம், எரிசக்தித் துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருநாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர். மனநல மருத்துவத் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இந்திய-அமெரிக்க சுகாதாரத் துறைகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மருத்துவ உபகரணங்கள் பாதுகாப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும் இந்தியாவின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையே மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம், எக்ஸான் மொபில் இந்தியா நிறுவனம், அமெரிக்காவின் சார்ட் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அமெரிக்காவிலிருந்து 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.
Discussion about this post